ரோந்து பணியில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூரத் தாக்குதல்: 7 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறை

ரோந்து பணியில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூரத் தாக்குதல்: 7 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு, காவல் பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு காவல் நிலையத்தில் எஸ்.ஐயாகப் பணியாற்றியவர் மெர்சி ரமணிபாய். கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி இவர் நீரோடி சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் ரோந்துப் பணிக்குச் சென்றார். அப்போது அங்கு ஒரு கும்பல் இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்றது. அந்தக் கூட்டத்தை கலைந்து போகுமாறு எஸ்.ஐ மெர்சி ரமணிபாய் கூறியிருக்கிறார். இதனால் அந்த கும்பல் எஸ்.ஐயை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.

காவல் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது, பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஜெரிபாய், சாலேட், சைஜூ, வியாகுல அடிமை, யேசுதாஸ், ராஜூ, கிறிஸ்துதாசன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீனிலும் வந்தனர். இது தொடர்பான வழக்கு குழித்துறை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் குற்றவாளிகள் 7 பேரும், அரசு அதிகாரியை பணிசெய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகளும், கொலை முயற்சி குற்றத்திற்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக ஒவ்வொருவருக்கும் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in