ஆன்லைன் சூதாட்டத்தில் 7 லட்சம் இழப்பு: கடனை அடைக்க வழிப்பறி செய்த இன்ஜினியர்

சரவணன்
சரவணன்

கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் இழந்ததால் , அந்தக் கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட சிவில் இன்ஜினியரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி(55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு மாம்பலம் கிரி தெருவில் நடைபெற்ற தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக தமிழ்செல்வி நேற்று சென்றார். அப்போது கிரி தெரு வழியாக தமிழ்செல்வி நடந்து சென்று கொண்டிருந்த போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென தமிழ்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினைப் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் விரட்டிச் சென்று செயின் பறித்து சென்ற வாலிபரை பிடித்து மாம்பலம் காவல் நி்லையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரவணன்(27) என்பது தெரியவந்தது.

மேலும் சிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்து விட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் சரவணன் வேலை செய்து வந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சரவணன், தனது நண்பர்களிடம் சுமார் 7 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் கடனை அடைப்பதற்காக சரவணன் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் மீது வழிப்பறி ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in