எல்லையில் பதற்றம்... 68,000 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு!

லடாக்கை நோக்கி தயாராகும் வீரர்கள்.
லடாக்கை நோக்கி தயாராகும் வீரர்கள்.

கிழக்கு லடாக் பகுதியில், சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள 68,000 இந்திய வீரர்களை விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் 2020 மே மாதத்தில் சீனா அத்துமீறி நுழைய முயன்றது. அந்த ஆண்டு , ஜூன் 15-ம் தேதி இருநாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இருந்து இந்திய ராணுவம் அதன் போர் திறன்களை மேம்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு லடாக் பகுதிக்கு 68,000 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் நேற்று அனுப்பப்பட்டுள்ளனர்.

விமானங்கள் மூலம் அனுப்பப்பட்ட இந்திய ராணுவவீரர்கள்.
விமானங்கள் மூலம் அனுப்பப்பட்ட இந்திய ராணுவவீரர்கள்.

இதுகுறித்து விமானப் படை மூத்த அதிகாரிகள் கூறுகையில், "68,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், சுமார் 90 டாங்கிகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் கிழக்கு லடாக்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

ரஃபேல் மற்றும் மிக் -29 விமானங்கள் உட்பட ஏராளமான போர் விமானங்கள் ரோந்துக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் பல்வேறு ஹெலிகாப்டர்கள் முன் தயாரிக்கப்பட்ட கட்டமைப்புகள், வெடிமருந்துகள் மற்றும் ராணுவ உபகரணங்களை மலைப்பாங்கான தளங்களுக்கு கொண்டு செல்வதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் அத்துமீறலை முறியடிக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நம் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 90 லட்சம் கிலோ எடையுள்ள பொருட்களை விமானப் படை குறுகிய காலத்தில் கையாண்டுள்ளது. மிக வேகமாக இவை அனுப்பி வைக்கப்பட்டதால், சீனப் படைகள் முன்னேறுவது தடுக்கப்பட்டுள்ளது" என்றனர். கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு வருவது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in