பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் திரண்ட 6800 இஸ்லாமியர்கள்: திருச்சி போலீஸார் அதிர்ச்சி

திருச்சியில் திரண்ட இஸ்லாமியர்கள்
திருச்சியில் திரண்ட இஸ்லாமியர்கள்

திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு இன்று ஒரே நேரத்தில் திரண்டு வந்த 6800 இஸ்லாமியர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த திருச்சி காவல்துறையும் அதிர்ந்து போனது.

தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்துவந்தவர் கமாலுதீன். இவருடைய மனைவி ரேஹானா பேகம். இவர்களுக்கு அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இருபது வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்த கமாலுதீன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கி, நல்ல முறையில் செயல்படுத்தி வந்தார்.

இதற்காக தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்துவந்த இஸ்லாமியர்களிடம் அவர்களின் விருப்பத்துக்கேற்ப பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு டிராவல்ஸ் நடத்தி வந்ததுடன், பங்குதாரர்களின் முதலீட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் லாபப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வந்தார். இந்நிலையில் கரோனா முதல் அலை பாதிப்புக்குப்பிறகு அவரால் பங்குதாரர்களுக்கு சரியாக பணம் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் உடல்நல பாதிப்புக்கு உள்ளான கமாலுதீன்,. கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி உயிரிழந்தார். அதன் பிறகு பங்குதாரர்கள் பலரும் தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால் கமாலுதீனின் குடும்பத்தினர் அதற்கு முறையான பதில் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

அதனால் கமாலுதீன் இறப்பிற்கு பிறகு அவரது சட்ட ரீதியான வாரிசுகள் பங்குதாரர்களின் பணத்தைத் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக கூறி தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் 6800 பங்குதாரர்களும் புகார் மனுவை அளித்தனர்.

அங்கு இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் பங்குதாரர்களுக்கு பணம் திரும்பக் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதனையடுத்து வழக்கை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றுமாறு அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்கப்பட்டு திருச்சிக்கு மாற்றப்பட்டது.

திருச்சிக்கு மாற்றப்பட்டு 9 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதனால் இன்று ஒட்டுமொத்த பங்குதாரர்களான 6800 பேரும் அமைதியான முறையில் கோரிக்கைகளை பதாகைகளாக கைகளில் ஏந்தி கொண்டு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். இத்தகவல் அறிந்து திருச்சி மாவட்ட காவல்துறையினர் அதிக அளவில் அங்கு திரண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

திருச்சி மன்னார்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தஞ்சையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் அந்தப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடியும், பரபரப்பும் ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in