கேரளா ஓட்டலில் நஞ்சான உணவு; 68 பேரின் உடல்நிலை பாதிப்பு: ஒருவர் கவலைக்கிடம்

கேரளா ஓட்டலில் நஞ்சான உணவு; 68 பேரின் உடல்நிலை பாதிப்பு: ஒருவர் கவலைக்கிடம்

எர்ணாகுளம் மாவட்டம் பரவூரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்ட 68 பேர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த 68 பேரில், சேரையைச் சேர்ந்த கீது என்ற பெண் ஆபத்தான நிலையில் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், பரவூரில் உள்ள மஜ்லிஸ் உணவகத்திலிருந்து குழிமந்தி, அல்பஹாம், ஷவாய் ஆகியவற்றை திங்கள்கிழமையன்று உட்கொண்டவர்கள் கடுமையான வாந்தி, பேதி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் உடல் நலக்குறைவு காரணமாக 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரவூர் பேரூராட்சி சுகாதாரத்துறையினர் அந்த ஓட்டலை மூடினர்.

இந்த ஓட்டலில் உணவருந்தியதால் பாதிக்கப்பட்ட இந்த 68 பேரில் இரு குழந்தைகள் உட்பட 28 பேர் பரவூர் தாலுகா மருத்துவமனையிலும், 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து சாப்பிட்டவர்கள் வேறு சில மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒன்பது பேர் குன்னுக்கரை எம்இஎஸ் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.

இது தொடர்பாக அத்தொகுதி எம்எல்ஏவும், கேரள எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ மாநிலத்தில் தொடர்ந்து ஏற்படும் உணவு நஞ்சாகும் பாதிப்புகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும், சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பல உணவு நஞ்சாகிய சம்பவங்களை அடுத்து, கேரள அரசு வெள்ளிக்கிழமை கேட்டரிங் சேவைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. புதிய வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தில் கேட்டரிங் சேவைகளுக்கான உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு ஹெல்த் கார்டு கட்டாயம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

முன்னதாக, ஜன.4-ம் தேதி கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை, மத நிகழ்வில் ஒரு பெண் உணவு நஞ்சான சந்தேகத்திற்கிடமான சம்பவத்தில் இறந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 429 நிறுவனங்களில் ஆய்வு நடத்தி 43 ஓட்டல்களை மூடியது. அந்த 43 உணவகங்களில் 21 உரிமம் இல்லாதவை என மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 138 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 44 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in