இலங்கைக்கு கடத்த முயன்ற 630 கிலோ கடல் அட்டை, 2 படகுகளுடன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 630 கிலோ கடல் அட்டை, 2 படகுகளுடன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 630 கிலோ கடல் அட்டைகள், 2 நாட்டுப்படகு, ஒரு டிராக்டர் ஆகியவற்றை போலீஸார், கூட்டு ரோந்து பணியின் போது பறிமுதல் செய்து வாலிர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக இன்று அதிகாலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் மரைன் போலீஸார்,க்யூ பிரிவு, தீவிர குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து வேதாளை தென் கடற்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த, டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 21 சாக்கு மூட்டைகளில் உலர்ந்த அட்டைகள் இருந்தது தெரிந்தது. எடை போட்டு பார்த்தபோது, தலா 30 வீதம் 630 கிலோ கடல் அட்டைகள் இருந்தது.

விசாரணையில், கடல் அட்டைகளை நாட்டுப்படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. இது தொடர்பாக கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் பொருத்திய 2 அதிநவீன நாட்டுப்படகு, ஒரு டிராக்டர் உடன் 630 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளைக் கடத்த முயன்ற வேதாளை முஹமது அப்துல் ( 20 ) என்பவரை போலீஸார் கைது செய்தனர். வேதாளை கடற்பகுதியில் இருந்து கடந்த ஓரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா, மசாலாப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது போலீஸாரால் தடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in