ஓராண்டில் 62,767 புகார்கள்; 175 கோடியை இழந்த பொதுமக்கள்: கைவரிசை காட்டிய சைபர் குற்றவாளிகள்

ஓராண்டில் 62,767 புகார்கள்; 175 கோடியை இழந்த பொதுமக்கள்: கைவரிசை காட்டிய சைபர் குற்றவாளிகள்

கடந்த ஒன்றரை ஆண்டில் பொதுமக்கள் சைபர் கிரைம் மோசடியில் 175 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என சைபர் க்ரைம் எஸ்.பி ஸ்டாலின் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சைபர் க்ரைம் எஸ்.பி ஸ்டாலின், "இணையவழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் 18-ம் தேதி வரை 62,767 சைபர் க்ரைம் புகார்கள் வந்துள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்டதாக 486 குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் பொதுமக்கள் சைபர் மோசடியில் சிக்கி 175 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். அதில் 33.45 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டு 9.8 கோடி ரூபாய் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 30% பேர் பைனான்ஸ் ஸ்கேம் மூலம் பணத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இணையவழி மோசடியில் பணத்தை இழந்தோர் உடனடியாக 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். உடனே இழந்த பணம் மீட்டு தரப்படும். இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் 90% குற்றவாளிகள் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருப்பதால் பணத்தை மீட்பதிலும், குற்றவாளிகளை நெருங்குவதிலும் போலீஸாருக்கு சிரமம் இருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

வெளிமாநிலங்களில் உள்ள சைபர் குற்றவாளிகளை எளிதாக பிடிப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள போலீஸாரை ஒருங்கிணைக்கும் வகையில் வெப்போர்டல் ஒன்று தொடங்க உள்ளோம். அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் அந்த மாநில போலீஸார் உதவியுடன் குற்றவாளிகளை எளிதாக பிடிக்க முடியும். இணைய வழியில் பணத்தை இழந்தோர் உடனடியாக புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சைபர் ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற குற்றங்கள் போல் அல்லாமல் சைபர் குற்றங்கள் முகத்தை காண்பிக்காமல் செய்யக்கூடிய குற்றம் என்பதால் போலீஸாரிடம் சிக்கமாட்டோம் என நினைத்து குற்றங்களில் ஈடுபடுவதாக பிடிபட்ட சைபர் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in