60 பேர் மீதும் சந்தேகப் பார்வை; அதிரடி காட்டியது திருச்சி சுங்கத்துறை: சிக்கியது 11 கிலோ தங்கம்

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தங்கம் கடத்தி வந்த 60 பேர் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா கால கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு தற்போது விமான சேவைகள் அனைத்தும் மீண்டும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

இதனால் மீண்டும் வியாபாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் குருவிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு குருவிகளாக சென்று வரும் பயணிகள் அதிக அளவில் திருச்சியில் இருந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து திடீரென நேற்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த சுமார் 60 பேர் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து கொண்டதால் அவர்களை தனியே அழைத்துச்சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார் 200 முதல் 500 கிராம் வரை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. அந்த வகையில் சுமார் 55 பயணிகளிடம் இருந்து 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

அதனைத்தொடர்ந்து மேலும் இரண்டு நபர்கள் தங்கத்தை வயிற்றில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in