சைரஸ் மிஸ்திரி விபத்தில் இறந்த பகுதியில் ஏற்கெனவே நிகழ்ந்த சாலை மரணங்கள்: அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்

சைரஸ் மிஸ்திரி விபத்தில் இறந்த பகுதியில் ஏற்கெனவே நிகழ்ந்த சாலை மரணங்கள்: அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, சமீபத்தில் மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இன்னொருவரும் மரணமடைந்தார். பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த மரணங்களைத் தொடர்ந்து அவர் பயணம் செய்த கார், விபத்து நடந்த விதம் தொடர்பாகத் தொடர்ந்து பரபரப்புச் செய்திகள் வெளியாகிவருகின்றன. அந்த வகையில், இந்த விபத்து நடந்த பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட சாலை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

செப்டம்பர் 4-ம் தேதி, குஜராத்தின் உத்வாடா நகரிலிருந்து மகாராஷ்டிரத் தலைநகர் மும்பைக்கு, மெர்சிடிஸ் எஸ்.யூ.வி காரில் சைரஸ் மிஸ்திரியும் வேறு சிலரும் சென்றுகொண்டிருந்தனர். மும்பையின் சிறந்த மகப்பேறு மருத்துவரான அனாஹிதா பண்டோலே காரை ஓட்டி வந்தார். அவரது கணவர் டேரியஸ் பண்டோலே காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். டேரியஸ் பண்டோலேயின் சகோதரர் ஜஹாங்கிர் பண்டோலேயும் சைரஸ் மிஸ்திரியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி

மதியம் 2.45 மணி அளவில் மகாராஷ்டிரத்தின் பால்கர் பகுதியில், சூர்யா நதியின் பாலத்தின் மீது கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரியும் ஜஹாங்கிர் பண்டோலேயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அனாஹிதாவும் டேரியஸும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணியாததால்தான் அவர்கள் உயிரிழக்க நேரிட்டது என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் 262 விபத்துகள்

இந்நிலையில், மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் தாணே மாவட்டத்தின் கோட்பந்தர் பகுதிக்கும், பால்கர் மாவட்டத்தின் தாப்சாரி நகருக்கும் இடையிலான 100 கிலோமீட்டர் தொலைவு சாலையில், இந்த ஆண்டில் மட்டும் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, இந்தப் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் 262 சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன. அதில் 62 பேர் உயிரிழந்தனர். 192 பேர் காயமடைந்தனர்.

காரணம் என்ன?

பெரும்பாலான விபத்துகள், அதிக வேகத்தாலும், ஓட்டுநரின் தவறான கணிப்புகளாலும்தான் நிகழ்ந்தன எனக் கருதப்படுகிறது. அதேசமயம், சாலைப் பராமரிப்பில் மெத்தனம், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இல்லாதது, போதுமான எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படாதது போன்றவையும் இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

சைரஸ் மிஸ்திரி பயணம் செய்த மெர்சிடிஸ் ஜிஎல்சி ரக எஸ்.யூ.வி கார், இதற்கு முன்னர் பல முறை சாலை விதிகளை மீறும் வகையில் இயக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in