6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை?: கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடல்
குடிபோதையில் 6 வயது சிறுமியைக் கடத்திக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள கபஷேரா பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த வியாழனன்று காணாமல் போனார். அவரைப் பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடினர். வெள்ளிக்கிழயைன்று சிறுமியின் உடல், வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிவிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியுடன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த முதியவர் வீடியோவில் இருந்த காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் இருந்த அவர், சிறுமியைக் கடத்தி கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக கூறினார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர். சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.