
மேற்கு வங்கம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு நெடுக வேகமாக பரவும் டெங்கு, மேற்கு வங்கம் மாநிலத்தில் உயிர் பலிகளை அதிகரிக்கச் செய்து வருகிறது. நாள் தோறும் எகிறும் டெங்கு தொற்றுகளின் எண்ணிக்கையும், அவற்றினூடே பலியாகும் உயிர்களும் அங்கே சுகாதார அவசரநிலையை கோரி வருகின்றன.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் வெள்ளிக்கிழமை 6 பேர் இறந்ததன் மூலம், மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு இதுவரையிலான டெங்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் சால்ட் லேக்கில் வசிப்பவர், மற்றவர் பாக் ஜதினைச் சேர்ந்தவர்.
பச்சிம் மேதினிபூரில் உள்ள கட்டலில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் காரக்பூரில் இரண்டு பேர் இறந்தனர். இதற்கிடையில், நிபா போன்ற அறிகுறிகளுடன் கேரளாவிலிருந்து திரும்பிய ஒரு புலம்பெயர் தொழிலாளி தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்கிறார்.
பெலியாகட்டா ஐடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், அதிக காய்ச்சல், குமட்டல் மற்றும் தொண்டை தொற்று ஆகியவற்றால் அவதியுற்று வருகிறார். அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
டெங்கு பரவலை எதிர்கொள்ளவே தவித்துவரும் மேற்கு வங்க சுகாதாரத் துறை, புதிதாக நிபா சவால் குறித்தும் பெரும் கவலை கொண்டுள்ளது.