
சேலத்தில் இருந்து கும்பகோணம் கோவிலுக்கு செல்வதற்காக காரில் வந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் ஒன்பது பேர் ஒரு ஆம்னி காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்சி வழியாக வந்துகொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர்களது கார் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது தஞ்சையில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி, ஆம்னி காரின் மீது மோதியது. இதில் அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி கார் சாலையின் ஓரம் தூக்கி வீசப்பட்டது. இதில் காரில் பயணித்த ஒரு குழந்தை, ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த வாத்தலை காவல் நிலைய போலீஸார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீஸார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சேலம் எஸ்பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார். இந்த விபத்தினால் சேலம் திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.