
ஜம்முவின் நர்வால் பகுதியில் இன்று காலை நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்புகளில் 7 பேர் காயமடைந்தனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஜம்மு நகரின் நர்வால் பகுதியில் இன்று நடந்த இரண்டு மர்ம குண்டுவெடிப்புகளில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஜம்முவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் தெரிவித்தார். குண்டுவெடிப்பிற்காக கார்களில் ஐஇடி வெடிபொருட்கள் பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நரீந்தர் பாட்டியாலி கூறுகையில், “குண்டுவெடிப்பில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
குண்டுவெடிப்பு நடந்த பகுதி வணிக மையமாக உள்ளது. இங்கு அனைத்து வகையான வாகனங்களையும் வைத்திருப்பவர்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக வருகை தருவதால் நாள் முழுவதும் பரபரப்பாக உள்ளது. இங்கே டயர்கள், உதிரி பாகங்கள் மற்றும் குப்பை பொருட்கள் ஆகியவற்றின் கடைகள் உள்ளது. “இந்த நகரின் யார்டு எண் 7-ல் இரண்டு வாகனங்களில் இருந்து குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. குண்டுவெடிப்புகளின் தன்மையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.