மேற்கு வங்கத்தில் கொட்டுகிறது கனமழை... புதுமணத் தம்பதி உள்பட 6 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கன மழை
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கன மழை

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா மற்றும் பிற மாவட்டங்களில் நேற்று பெய்த இடியுடன் கூடிய கனமழைக்கு புதுமணத்தம்பதியர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் தென் மாவட்டங்களான நதியா, புருலியா மற்றும் புர்பா பர்தமான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் புதிதாக திருமணமான தம்பதி உள்பட 6 பேர் உயிரிழந்ததாக அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கன மழை காரணமாக கிழக்கு ரயில்வேயின் சீல்டா பிரிவின் சீல்டா - கேனிங் வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

இடியுடன் கூடிய மழையின் போது வாழை இலைகள், மேல்நிலை மின்சார இழுவை கம்பியில் விழுந்ததால் நேற்று இரவு 8 மணி முதல் 9.15 மணி வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக பிற இடங்களிலிருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக இந்திய விமான நிலைய ஆணைய (ஏஏஐ) வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல், கொல்கத்தாவுக்கு வரும் மூன்று விமானங்கள் (டெல்லியில் இருந்து இரண்டு, பாக்டோக்ராவிலிருந்து ஒன்று) மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மேற்கண்ட பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழை காரணமாக கடந்த சில நாள்களாக தகித்து வந்த வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது.

தெற்கு ஜார்க்கண்டில் புயல் சுழற்சி மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வலுவான ஈரப்பதம் ஊடுருவல் காரணமாக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் கன மழையால் சாலையில் தேங்கிய வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
கொல்கத்தாவில் கன மழையால் சாலையில் தேங்கிய வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

கொல்கத்தாவில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போதைய மழை அம்மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சற்று ஆறுதல் அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in