
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஆறுவிதமான பூச்சிக் கொல்லிகளுக்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அதிக லாபத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவும், புதிய ரகங்களைப் பயிரிடுவதாலும் விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தெளித்து வருகின்றனர். இதனால் உணவுகளில் அதிக விஷத்தன்மை காணப்படுகிறது. மேலும் தற்கொலை செய்துகொள்பவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளை உட்கொண்டு இறக்கும் சம்பவம் தொடர்கிறது. தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் ஆறு அபாயகரமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த 60 நாட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி மோனோகுரோடோபோஸ், புரெபோனோபோஸ், அஸ்பேட், புரெபோனோபோஸ் சைபர்மெத்ரின் கலவை, குளோர்பைரிபோஸ் சைபர்மெத்ரின் கலவை, குளோர்பைரிபோஸ் ஆகிய ஆறு விதமான பூச்சிக் கொல்லிகளுக்கு 60 நாட்களுக்குத் தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.