வரும் அக்டோபர் அல்ல... அடுத்த அக்டோபர் முதல் 6 இருக்கைகளுக்கும் ஏர்பேக் கட்டாயம்!

கார் உற்பத்தியாளர்களுக்கான கெடு தேதியை மாற்றிய மத்திய அரசு
வரும் அக்டோபர் அல்ல... அடுத்த அக்டோபர் முதல் 6 இருக்கைகளுக்கும் ஏர்பேக் கட்டாயம்!

வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல், காரின் 6 இருக்கைகளுக்கும் ஏர்பேக் பொருத்துவது கட்டாயம் என அறிவித்திருந்த மத்திய அரசு, அதை 2023 அக்டோபர் மாதத்துக்குத் தள்ளிவைத்திருக்கிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2021-ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 426 பேர், ஒரு மணி நேரத்துக்கு 18 பேர் சாலை விபத்தில் பலியாகியிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இதையடுத்து, 2022 அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின்னர் தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்படுவது கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்தது. 2022 ஜனவரி 14-ல் இந்த அறிவிப்பு வெளியானது. காரில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருந்தால் விபத்து நேரும்போது உடனடியாக அவர் விரிந்துவிடும். இதன் மூலம் காரில் அமர்ந்து பயணிப்பவர்கள் காயமடையும் வாய்ப்பு குறையும் என்பதால், ஏர்பேக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி செப்டம்பர் 4-ல் மும்பையில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற இன்னொருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணியாததால்தான் அவர்கள் உயிரிழக்க நேரிட்டது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி

முன்னதாக, சாலை விபத்துகள் தொடர்பாக கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, “கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் சிறிய ரக கார் வாங்குகிறார்கள். அந்தக் கார்களில் ஏர்பேக்குகள் இல்லையென்றால் விபத்து ஏற்படும் தருணங்களில் மரணங்கள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே, அனைத்து வகை கார்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் பொருத்த வேண்டும் என கார் தயாரிப்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், முந்தைய அறிவிப்புக்கு மாறாக, 2023 அக்டோபர் 1 முதல் கார்களில் ஏர்பேக்குகள் பொருத்துவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் நிதின் கட்கரி, ‘உலகளாவிய விநியோகச் சங்கிலித் தொடரில் ஏற்பட்டிருக்கும் முடக்கத்தின் விளைவுகளை வாகன உற்பத்தித் துறை எதிர்கொண்டிருக்கும் சூழல், அதன் மூலம் மேக்ரோ பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (எம்-1 வகை) குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கும் திட்டத்தை 2023 அக்டோபர் 1 முதல் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in