59 சதவீத இந்திய ஊழியர்களுக்கு மன அழுத்தம்!

59 சதவீத இந்திய ஊழியர்களுக்கு மன அழுத்தம்!

கரோனா பெருந்தொற்று காலம் இன்னமும் நீண்டு கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் 5-ல் 3 ஊழியர்கள் மன அழுத்தம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ‘மார்ஷ் இந்தியா’ நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில், நாட்டில் 59 சதவீத ஊழியர்கள் மன அழுத்தத்தில் தவிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சராசரியைவிட கூடுதல் என்றும் இந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.

13 நாடுகளில் உள்ள 14 ஆயிரம் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு இது. நாள்தோறும் வழக்கத்தைவிட கரோனா காலத்தில் கூடுதல் மன உளைச்சலுடன் இருப்பதாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த 51 சதவீத ஊழியர்கள் இதில் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 50 சதவீத ஊழியர்கள் கடுமையான மனச்சுமையை அன்றாடம் எதிர்கொள்வதாகக் கவலை தெரிவித்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை, 59 சதவீத ஊழியர்கள் பணி பாதுகாப்பு இன்றியும் சம்பளப்பிடிப்பாலும் வேலை நெருக்கடியாலும் கடுமையான மன உளைச்சலுக்கு அன்றாடம் ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களின் நலன்குறித்து நிறுவனம் ஓரளவு அக்கறை செலுத்துவதாக, 53 சதவீத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கரோனாவுக்கு முன்பு 2019-ல் எடுக்கப்பட்ட இதே வகையிலான கணக்கெடுப்பில், 58 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனம் நல விரும்பிகளாகச் செயல்படுவதாகத் தெரிவித்திருந்தனர்.

அதேநேரத்தில் தங்களது நிறுவனங்களால் முழு ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட வேலை சார்ந்த ஆதரவு கிடைக்கப்பெற்ற ஊழியர்கள் குறைந்த அளவிலான மன உளைச்சலுடன் காணப்படுவதாகவும் சிறப்பாகப் பணி புரிவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், நாடு முழுவதிலும் 21 சதவீத ஊழியர்கள் மட்டுமே அவ்வாறு மன அமைதியுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.