போலி கையெழுத்துப்போட்டு 55 பவுன் நகை, 9 லட்சம் பணம் அபேஸ்: வங்கி மேலாளரை பதறவைத்த நகை மதிப்பீட்டாளர்

போலி கையெழுத்துப்போட்டு 55 பவுன் நகை, 9 லட்சம் பணம் அபேஸ்: வங்கி மேலாளரை பதறவைத்த நகை மதிப்பீட்டாளர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி மேலாளரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு தங்க நகை மதிப்பீட்டாளர், தன் நண்பர்களுடன் சேர்ந்து 55 பவுன் நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணம் பகுதியில், இந்தியன் வங்கியின் கிளை உள்ளது. இங்கு படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுடலை என்னும் சுடலைராஜ்(48) அடகு வைக்க வரும் நகைகளின் மதிப்பீட்டாளராக இருந்தார். இவர் இங்கு 2018 முதல் 2020-ம் ஆண்டுவரை பணிசெய்த காலத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை, வங்கியின் மேலாளரின் கையெழுத்தை போலியாகப் போட்டு நகைகளைத் திருப்பியுள்ளார்.

அந்த நகைகளை அவரது கூட்டாளிகளான படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த குமாரவேல்(41), ராம்குமார்(32), வடக்கூரைச் சேர்ந்த ரமேஷ்(42) ஆகியோர் பெயர்களில் அதிகத் தொகைக்கு அதேவங்கியில் அடகு வைத்து உள்ளார். மேலும், இதில் சிலவற்றை இவர்களே சேர்ந்து திருப்பவும் செய்துள்ளனர். இதன்மூலம் 9,78,786 ரூபாயும், 55 பவுன் தங்கநகைகளையும் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதை வங்கித் தணிக்கையின் போது கண்டுபிடித்த வங்கி மேலாளர் சங்கரசுப்பிரமணியன் இதுகுறித்து தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சம்பத் மேற்பார்வையில் இயங்கிய குற்றப்பிரிவு போலீஸார் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்குபேரையும் கைதுசெய்தனர்.

நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளரே தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்த மோசடி சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in