உக்ரைனில் 5,000 தமிழர்கள் சிக்கி தவிப்பு; இந்திய மாணவர்களின் விவரம்

உக்ரைனில் 5,000 தமிழர்கள் சிக்கி தவிப்பு; இந்திய மாணவர்களின் விவரம்
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவ, மாணவிகள்

ரஷ்ய போரால் உக்ரைனில் சிக்கிய மாணவர்களில் அதிகமாக 5,000 பேர் தமிழர்களாக உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து சிக்கியவர்களின் விவரமும் வெளியாகத் துவங்கி உள்ளது.

மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி உக்ரைனில் 20,000 இந்தியர் சிக்கியுள்ளனர். இவர்களில் 4,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் உக்ரைனின் பல்வேறு மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைகழகங்களில் பயிலச் சென்ற மாணவ, மாணவியர். இதில், மிக அதிகமாக முதல் எண்ணிக்கையில் 5,000 பேர் தமிழர்களாக உள்ளனர். இதில் இதுவரை 23 மாணவ, மாணவியர் மட்டுமே வீடு திரும்பியுள்ளனர்.

இரண்டாவது எண்ணிக்கையில் குஜராத்திலிருந்து 2,500 மாணவர்கள் கல்வி பயிலச் சென்றிருப்பது தெரிந்துள்ளது. சிறிய மாநிலமாக இருந்தாலும் கேரளாவிலிருந்தும் 2,320 மாணவர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். ஹரியானா 2000, மகாராஷ்டிராவில் 1,200, மேற்கு வங்க மாநிலம் 1,000, ராஜஸ்தான் 800 எனவும் தெரிந்துள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து உக்ரைன் சென்றவர்கள் மீதான புகார் அதன் மாநில அரசுகளிடம் பதிவாகி உள்ளது.

இதன்படி, உக்ரைனில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் தம் மாநில அரசின் உதவி மையங்களில் தம் புகார்களை பதிவு செய்துள்ளனர். இதில், புதுச்சேரியில் எட்டு மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா 346, ஆந்திரா 170, இமாச்சலப்பிரதேசம் 130, மத்தியப்பிரதேசம் 87, சிக்கிம் 20, அசாம் மற்றும் ஜார்க்கண்டில் 100 எனப் பட்டியல் நீள்கிறது.

உக்ரைனிலிருந்து கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். இதில் வந்த முதல் விமானம் மும்பைக்கு நேராகச் சென்று தரையிறங்கியது. இதில் தமிழர்கள் எவரும் இல்லை. இதன் மறுநாளான நேற்று காலை முதல் இரவு வரை மூன்று விமானங்கள் டெல்லிக்கு வந்தன. இன்று காலை ஒரு விமானம் வந்தது. மற்றொரு ஏர் இந்தியா விமானமும் டெல்லிக்கு இன்று மாலை வந்து சேர உள்ளது. இந்த ஆறாவது ஏழாவது மீட்பு விமானத்தில் அதிகமாக சுமார் 20 தமிழர்கள் வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்புப்பணியில் கல்வி நிறுவனங்களின் ஏஜெண்டுகள்

உக்ரைனிலிருந்து மாணவர்கள் அனைவரும் தாம் பயிலும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக மீட்கப்படுகின்றனர். இப்பணியில் அந்த மாணவர்களை உக்ரைனுக்கு அனுப்பிய இந்திய கல்வி நிறுவனங்கள் அல்லது உக்ரைன் கல்வியகங்களின் ஏஜெண்டுகளும் இறங்கியுள்ளனர். இவர்கள் தம் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் மாணவர்களின் பெற்றோர்கள் கேட்கும் தகவல்களை அளித்து உதவி வருவது பாராட்டுக்குரியதாகி விட்டது. சிலசமயம் இவர்களிடமிருந்து மாநில அரசுகள் விவரங்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முழுவிவரம் கிடைக்காமல் தவிக்கும் மாநில அரசுகள்

உக்ரைனிலிருந்து வரும் மாணவர்களின் பெயர் மற்றும் விலாசங்கள் உள்ளிட்ட தகவல் விவரம் இந்தியாவில் மத்திய வெளியுறத்துறை அதிகாரிகளிடம் உள்ளது. இவர்கள் மாணவர்கள் மீட்பில் உக்ரைனிலிருந்து டெல்லி வரை மட்டுமே பொறுப்பு எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. டெல்லி வந்திறங்கும் மாணவர்களை அவர்கள் சார்ந்த மாநில அரசுகளின் அதிகாரிகள் அடையாளம் கண்டு வரவேற்று உதவி வருகின்றனர். விமானங்களில் வருபவர்களின் விவரம் அந்த அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவதில்லை. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநில அதிகாரிகள் அலைக்கழிக்கப்படும் பரிதாபமும் நிகழ்கிறது. இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் மத்திய வெளியுறத்துறை அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்புகள் இல்லை எனவும் புகார் நிலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in