500 ரூபாய் அபராதம் விதித்ததால் ஆவேசம்; தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநர்: மனைவியை அழைத்து எச்சரித்த போலீஸ்

500 ரூபாய் அபராதம் விதித்ததால் ஆவேசம்; தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநர்: மனைவியை அழைத்து எச்சரித்த போலீஸ்

அதிக எடை ஏற்றி சென்ற வேன் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீஸார் 500 ரூபாய் அபராதம் விதித்ததால் வேன் ஓட்டுநர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் லோடு வேன் ஓட்டுநர் முத்துக்குமார்(55). இவர் கடந்த 5-ம் தேதி வேனில் குறிப்பிட்ட அளவைவிட அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தார். மத்திய கைலாஷ் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த கோட்டூர்புரம் போக்குவரத்து போலீஸார், முத்துக்குமார் ஓட்டிவந்த லோடு வேனை மடக்கி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த முத்துக்குமார் சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்கு பிறகு நேற்று குடிபோதையில் தரமணி டைடல் பார்க் சிக்னல் அருகே உள்ள பாலத்தின் மீது ஏறி நின்று குதித்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூச்சலிட்டுள்ளார்.

இதனை பார்த்து பொதுமக்கள் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தரமணி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிபோதையில் இருந்த முத்துக்குமாரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரது மனைவி வனிதாவை வரவழைத்து, எச்சரித்து போலீஸார் பின்னர் எழுதி வாங்கிக்கொண்டு முத்துக்குமாரை அவரது மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in