3 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது: வாகனச்சோதனையில் சிக்கினர்

3 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது: வாகனச்சோதனையில் சிக்கினர்

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுக்கு சிறுவர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என அடிமையாகி வருகிறார்கள். இதனால் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது.

பல்லாவரம் பகுதியில் காவல் துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, 3 ஆயிரம் போதை மாத்திரைகள், 30 போதை ஊசி மருந்துகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 பேரையும் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த யோவான், குரோம்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் குமார் மற்றும் கல்லூரி மாணவர் நிவாஸ் என்பது தெரியவந்தது. இவர்கள் டெல்லியிலிருந்து போதைமாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்துள்ளனர். யோவான், சந்தோஷ்குமார், பாஸ்கர் ஆகியோர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in