
மேட்டுப்பாளையம் அருகே இறந்து கிடந்த பெண் யானை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகள் அடர் வனத்தையொட்டி உள்ளது. இங்கு காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இந்தநிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் தோலம்பாளையம் அருகே நீலாம்பதி வனப்பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்து கிடந்த பெண் யானை குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
5 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் இறப்பிற்கான காரணமறிய உடற்கூராய்வு இன்று மாலை நடைபெற உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். உடற்கூராய்வுக்கு பின், உடல் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து யானையின் உடல் அப்பகுதியிலேயே புதைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.