
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிய ஐந்து தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மூன்றாவது அணுமின் நிலையம் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவிற்கு நவீன உபகரணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். கொதிகலன் பிரிவில் தொழிலாளர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றியதால் அது கொதிகலனில் படிந்திருந்த நிலக்கரி துகள்களில் பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அதனால் உள்ளே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர். ஆனாலும் ஐந்து தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அதனைக் கண்டதும் மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்து அவர்களைப் போராடி மீட்டனர்.
திருநாவுக்கரசு, செந்தில்குமார், சுரேஷ், செல்வராஜ், தட்சிணாமூர்த்தி ஆகிய தீயில் படுகாயம் அடைந்த ஐந்து தொழிலாளர்களும் உடனடியாக நெய்வேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. என்எல்சி சேர்மன் ராகேஷ்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் தீப்பற்றிய அனல் மின் நிலைய பகுதியையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீயால் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் வந்து பார்வையிட்டனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் உயர் சிகி்ச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு சிலரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிகிறது.
அங்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். என்று என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடைபெறுவதும் இதனால் பல தொழிலாளர்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளதாகவும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.