இனிமேல் களி நினைவிற்கு வராது: பூரி, சப்ஜி, அல்வா என மெனு போடும் சிறைக்கு 5 ஸ்டார் அந்தஸ்து

இனிமேல் களி நினைவிற்கு வராது:  பூரி, சப்ஜி, அல்வா என மெனு போடும் சிறைக்கு 5 ஸ்டார் அந்தஸ்து

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரூக்காபாத் சிறைக்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் செய்தவர்களைப் பார்த்து களி தின்னப் போகிறாயா என முன்பு கூறுவார்கள். அதாவது சிறைச்சாலைக்குப் போகப் போகிறாயா என்பதை அப்படிக் கேட்காமல் கேட்பார்கள். ஆனால், ஒரு சிறைச்சாலையில் வித விதமான தரமான உணவு வழங்கப்படுவதால் 5 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் படேகர் மாவட்டத்தில் உள்ள பர்ருகாபாத் சிறைக்கு தான் இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.

இந்த சிறையில் சுமார் 1,144 கைதிகளுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கப்படுகிறது. மேலும் உணவு வகைகள் நிறைந்ததாகவும், சரியான பக்குவத்துடன் பரிமாறப்படுவதாகவும் கூறப்படுகிறது. உணவு வழங்குபவர்கள் தூய்மையுடன் பணிபுரிந்து வருவதாகவும், அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு உயர்தரத்தில் உணவு சமைத்து வழங்கப்படுவதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு நடத்தி இந்த சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த அந்தஸ்து 2024 ஆகஸ்ட் 18-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை வழங்குவதற்கு முன் சில சிறை ஊழியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு தர அதிகாரிகள் உணவு பொருட்கள் வாங்கும் இடம் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். சிறையில் வாரத்தில் 7 நாட்களும் கைதிகளுக்கு விதவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை உணவுகள் கைதிகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. கொண்டைக்கடலை, பாவ் ரொட்டி உள்ளிட்ட இரண்டு நாட்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு கோதுமை கஞ்சி வழங்கப்படுகிறது. பல்வேறு வகையான பருப்பு வகைகளால் செய்யப்பட்டவை மதிய உணவாக வழங்கப்படுகின்றன. பூரி, சப்ஜி மற்றும் அல்வா ஆகியவை மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் பரிமாறப்படுகின்றன. முப்பது முதல் முப்பத்து ஐந்து கைதிகள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் உணவின் தரமும் சரிபார்க்கப்படுகிறது" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in