4 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர்கள்!

4 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர்கள்!

இலங்கையில் நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தை 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கையில் கடந்தாண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அங்கு உணவு பண்டங்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது. இது தொடர்பாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து இலங்கை அரசிற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டின.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாமல் இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தவண்ணம் உள்ளனர்.

கடந்த மார்ச் 22-ம் தேதி முதன்முதலாக அகதிகளாக வரத் துவங்கி கடந்த 2 மாதங்கள் வரை வந்த 212 பேர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை கிளிநொச்சி நச்சிகுடா கடற்பகுதியில் இருந்து பைபர் படகில் நேற்று காலை கிளம்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரம் அருகே இன்று அதிகாலை வந்தனர். மரைன் போலீஸார் அவர்களை மண்டபம் முகாம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த பாரதி டைஸ் (42), இவரது தாயார் முனியம்மாள் (75), இவரது மகன்கள் கிருசந்தன் (17), அருள் (15), மகள் பிரித்திகா (10) ஆகியோர் எனவும், நேற்றிரவு 10 மணியளவில் கிளிநொச்சி நாச்சிகுடா கடற்கரையில் மர்ப்படகில் புறப்பட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் சேராங்கோட்டை கடற்கரை வந்தடைந்ததாக தெரிந்தது.

படகிற்கு இவர்கள் இலங்கை பணம் 4 லட்சம் கொடுத்து வந்திறங்கியதும் தெரிந்தது. இவர்களிடம் மண்டபம் க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் 22 முதல் தமிழகம் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in