திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள்... வளைத்துப் பிடிக்க வனத்துறையினர் மும்முரம்!

திருமலை திருப்பதி - சிறுத்தை
திருமலை திருப்பதி - சிறுத்தை

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தும் 5 சிறுத்தைகளை பிடிக்க, கூண்டுகளோடு வனத்துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

திருப்பதியில் அலிபிரியில் இருந்து கோயிலுக்குச் செல்லும் மலைபாதையில் சமீபத்தில் 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கொன்றது. பக்தர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. உயிரச்சத்துடன் மலையேறும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, வனத்துறையினர் சார்பில் சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. அந்த கூண்டுகளில் அடுத்த ஒரு மாதத்தில் 5 சிறுத்தைகள் அடுத்தடுத்து சிக்கின. அவை வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருப்பது உறுதியானதில், பக்தர்கள் மத்தியிலான அச்சம் மேலும் அதிகரித்தது. வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கம்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருமலை மலைப்பாதை
திருமலை மலைப்பாதை

இந்நிலையில், மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாடுவது தெரியவந்துள்ளது. மலைப்பாதை நெடுக ஆங்காங்கே பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் உறுதியானது. ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில்  3 சிறுத்தைகளும்,  அலிபிரி நடைபாதையில் 2 சிறுத்தைகளும் சுற்றித் திரிவது தெரிய வந்தது. 

சிறுத்தை சுற்றி திரியும் இந்த இடங்களில் வனத்துறையினர் இரும்பு கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். எனினும் திருப்பதிக்கு மலைப்பாதையை தேர்வு செய்திருக்கும் பக்தர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தே காணப்படுகிறது. சிசிடிவி கேமராக்களில் தென்பட்ட சிறுத்தைகள் விரைவில் வனத்துறையினர் கூண்டுகளில் சிக்க வேண்டும் என்பதும், திருப்பதி பக்தர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in