அதிவேகத்தில் வந்த டாரஸ் லாரி மோதி கார் நொறுங்கியது: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி

அதிவேகத்தில் வந்த டாரஸ் லாரி மோதி கார் நொறுங்கியது: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஜய் வீரராகவன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் கடலூர் மாவட்டம்  வேப்பூர் அருகே  வந்து கொண்டிருந்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால்  பெரிய நெசலூர் அருகே அய்யனார் பாளையம் என்ற இடத்தில் சாலை ஓரமாக காரை நிறுத்தியுள்ளார். 

அப்போது அந்த வழியாக அதிவேகமாக மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி, காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில்  கார் முற்றிலுமாக உருக்குலைந்து நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீஸார்  காரின்  சிதைந்த பாகங்களை அப்புறப்படுத்தி அதிலிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். 

காரிலிருந்த விஜய் வீரராகவன் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள்,  இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார்  அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in