வியாபாரியிடம் கத்திமுனையில் 5 லட்சம் வழிப்பறி: சென்னையில் முகமூடிக்கும்பல் அட்டகாசம்

வியாபாரியிடம் கத்திமுனையில் 5 லட்சம் வழிப்பறி: சென்னையில் முகமூடிக்கும்பல் அட்டகாசம்

சென்னையில் ஏடி.எம்மில் ஹவாலா பணம் செலுத்த வந்த பழவியாபாரியிடம் கத்தியைக் காட்டி 5லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த மூகமூடிக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மைதீன்(37). ட்ரைபுரூட்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். மைதீன் இரவு நேரங்களில் லட்சக்கணக்கான ஹவாலா பணத்தைக் கமிஷன் அடிப்படையில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் ஏடிஎம் மையம் மூலமாக டெபாசிட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஒரு லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்தால், கமிஷன் தொகையாக ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் மைதீன் இந்த தொழிலைச் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கொத்தவால் சாவடியைச் சேர்ந்த நஜீம் என்பவர் கொடுத்த 9 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை ஏழு வங்கி ஏடிஎம்களில் செலுத்த மைதீன் சென்றுள்ளார்.

சென்னை சென்ட்ரல் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்களில் 3.78 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்திவிட்டு, பின்னர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடி.எம்மில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், மைதீனை வழிமறித்துள்ளது. பின்னர் அந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, மைதீனிடம் இருந்த 5லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது. இந்த வழிப்பறிச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மைதீன் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமூடிக் கும்பலால் 5 லட்சம் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in