பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு போதைப்பொருள் கடத்தல்: 5 போலீஸார் சிக்கினர்

குற்றவாளிகள் கைது
குற்றவாளிகள் கைது

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு போதைப்பொருள் கடத்தியதாக 5 போலீஸார் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரான் செக்டார் வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்திவந்த 5 போலீஸார் உள்பட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகாமையில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாகப் பேசிய குப்வாராவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் யுகல் குமார் மன்ஹாஸ், "நாங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு பெரிய போதைப்பொருள் கும்பலை முறியடித்துள்ளோம். 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐந்து போலீஸார், கடைக்காரர்கள், ஒரு அரசியல் பிரமுகர் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோர் அடங்குவர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த கேரானில் வசிக்கும் ஷகிர் அலி கான், தனது மகன் தம்ஹீத் அகமதுவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தார்" என்று கூறினார். போலீஸாரின் கூற்றுப்படி, குப்வாரா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் பெரும் நெட்வொர்க் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகநபரிடம் இருந்து இதுவரை இரண்டு கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு காஷ்மீரின் எல்லையோர மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக 161 பேர் மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் என்பது இப்போது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூட எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில், பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில், எல்லைப் பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் ரொமேஷ் குமாரை லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையதாக தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும், அவரிடமிருந்து 91 லட்சம் ரூபாயை என்ஐஏ மீட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலமாகவே இந்த பணம் கிடைத்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in