அதிகாலையில் 5 செல்போன் கடைகளை உடைத்து கொள்ளை: பைக்கில் வந்த கும்பல் துணிகரம்

அதிகாலையில் 5 செல்போன் கடைகளை உடைத்து கொள்ளை: பைக்கில் வந்த கும்பல் துணிகரம்

சென்னை அண்ணாசாலையில் 5 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன், உதிரிபாகங்கள், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கிக கொண்டிருக்கும் ரிச்சி தெருவில் இரவு நேரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு அதே போன்ற சம்பவம் ரிச்சி தெருவில் அரங்கேறி உள்ளது. தொடர்ச்சியாக 5 செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கடைகளின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப், ஹெட்போன் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பசிர்அகமது, செய்யது, உள்ளிட்டோர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில் போலீஸார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அதிகாலை 3.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, கடைகளை நோட்டமிட்டு, அதில் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களைத் திருடுவது போன்றும், மற்ற இருவர் வெளியில் நின்று காவல் காப்பது போல் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளங்களை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in