மருத்துவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பிரிவு மாற்றம்: பிரியா மரண விவகாரத்தில் போலீஸ் அடுத்த நடவடிக்கை

மருத்துவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பிரிவு மாற்றம்: பிரியா மரண விவகாரத்தில் போலீஸ் அடுத்த நடவடிக்கை

தவறான அறுவை சிகிச்சை அளித்த இரு மருத்துவர்கள் உட்பட 5 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

சென்னை வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கடந்த 15-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்நது பெரவள்ளூர் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமன்றி இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு மாணவி பிரியா மரண வழக்கு தொடர்பாக தேவையான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கையை காவல்துறைக்கு அனுப்புமாறு 12 கேள்விகளுடன் காவல்துறை சார்பில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தனிக்குழு நடத்தி முடித்த விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் நேற்று மாலை காவல்துறையிடம் வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையில் மாணவி பிரியாவின் மரணம் மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சை காரணமாக நிகழ்ந்துள்ளது என்றும், இச்சம்பவத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், பணி மருத்துவ அதிகாரி, எலும்பியல் நிபுணர் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் பணியில் இருந்த வார்டு ஊழியர் ஆகிய 5 பேர் மீது தவறு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் உட்பட இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிக்குழு விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை காவல்துறை மூலம் சட்ட வல்லுநர்களுக்கு அனுப்பப்பட்டு எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் உட்பட 5 பேர் மீது 304 (a) அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக தனிக்குழு மருத்துவ அறிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்பித்து சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் இருவர் உட்பட இதில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆணையை அவர்கள் வாங்காததால் ஆணையை வீட்டு கதவில் மருத்துவ பணியாளர்கள் ஒட்டியுள்ளனர். தற்போது சம்மன் கொடுத்தாலும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க வாய்ப்பிருப்பதால் மருத்துவர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in