லக்கிம்பூர் சம்பவம்: அமைச்சர் அஜய் மிஸ்ராவை பிளாக்மெயில் செய்ததாக 5 பேர் கைது

லக்கிம்பூர் சம்பவம்: அமைச்சர் அஜய் மிஸ்ராவை பிளாக்மெயில் செய்ததாக 5 பேர் கைது
அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பான காணொலிகளை வைத்துத் தன்னை பிளாக்மெயில் செய்ய முயற்சித்ததாக, மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4 பேர் நொய்டாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர் எனப் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

பிபிஓ நிறுவனம் ஊழியர்களான அவர்கள் அமைச்சரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேச முயன்றதாகச் சொல்லப்படுகிறது. டெல்லி மாவட்டக் காவல் நிலையத்தில் அவரது உதவியாளர் கொடுத்த புகார்களின் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 17-ல் தனக்கு அவர்களிடமிருந்து மிரட்டல் போன் வந்ததாக அஜய் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில், அக்டோபர் 3-ம் தேதி விவசாயிகள் சென்ற ஊர்வலத்தில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நடந்த மோதலில் பாஜகவினர் 3 பேர், ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ரா
கைதுசெய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ரா

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆசிஷ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றன. நாடாளுமன்றம் அருகே எதிர்க்கட்சிகள் இணைந்து பேரணியும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in