
புதுச்சேரியில் சாலையில் கடந்த 49 லட்சம் ரூபாய் பணம் யாருடையது என்று போலீஸார் விசாரித்த நிலையில், அது வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் அண்ணாசாலையில் செட்டிவீதி சந்திப்பில் ஒரு பை நீண்ட நேரமாகக் கீழே கிடந்துள்ளது. இதை அங்கிருந்த டீக்கடையில் வேலை பார்க்கும் பெரியசாமி என்பவர் கவனித்துவிட்டு, அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் பையைத் திறந்து பார்த்துள்ளார்.
அந்த பையின் உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதையடுத்து உடனடியாக பெரியக்கடை போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த வந்த போலீஸார், பையை கைப்பற்றி அதிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தனர். ஒட்டுமொத்தமாக ரூ.49 லட்சம் இருந்தது. இதையடுத்து ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி தெற்கு பிரிவு சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.
இந்த பணப்பையை சாலையில் விட்டுச் சென்றது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்துள்ளது தெரியவந்தது.
அதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். அவர் வெங்கட்டா நகரை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. வங்கியில் பணத்தைச் செலுத்தச் சென்றபோதுதான் அவர் பணத்தைத் தவறவிட்டுள்ளார்.
இதையடுத்து உரிய ஆவணங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை திங்கள்கிழமை சமர்ப்பிக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.