மாதந்தோறும் ஆன்லைன் ஆப் மோசடியில் சிக்கும் 45 ஆயிரம் பேர்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட காவல் ஆணையர்

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

நாடு முழுவதும் மாதந்தோறும் 45 ஆயிரம் பேர் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மூன்று முக்கிய வழக்குகளை விரைந்து முடித்து அதில் தொடர்புடைய 10 குற்றவாளிகளைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 சவரன் நகைகள், 15 அசையா சொத்துகள், 8 செல்போன்கள், 7 லேப்டாப், 19 சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்குகளைச் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்த சைபர் கிரைம் போலீஸார் மற்றும் ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீஸாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஆன்லைன் லோன் செயலி மோசடியில் சிக்கி பொதுமக்கள் பலர் பணத்தை இழந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஆன்லைன் மோசடி லோன் செயலியில் பதிவான 200-க்கும் மேற்பட்ட மெயில், வங்கி கணக்குகள், 900-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் எண்கள் மூலமாக மோசடி நபர்கள் குறித்த தகவல் திரட்டப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்குச் சென்று தீபக்குமார் பாண்டே, ஜித்தேந்தர் தன்வர், நிஷா, பிரகாஷ் சர்மா ஆகிய நான்கு பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த மோசடி கும்பல் தப்பிப்பதற்காக 3 மாதத்தில் 937 செல்போன் எண்கள் மாற்றி, 200 யூபிஐ ஐடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 50 பேரை அலுவலகத்தில் பணியமர்த்தி 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்ற முறையில் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டதால் இவர்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' மோசடி கும்பல் என அழைக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும், "இந்த கும்பல் நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் வரை பணப்பரிவர்த்தனையில் செய்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பல் ஆன்லைன் லோன் ஆப்பை உருவாக்குவதற்கு தனியாக சாப்ட்வேர் குழு ஒன்றை அமைத்து 50-க்கும் மேற்பட்ட லோன் ஆப்புகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.. இந்த கும்பல் 20,000 ரூபாய் கொடுத்து பொதுமக்களிடம் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல ஆவணங்களைப் பெற்று வாங்கி மோசடியில் ஈடுபட்டுவந்ததும் தெரிய வந்துள்ளது. சென்னையில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக மோசடியில் சிக்கியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாதந்தோறும் 45 ஆயிரம் நபர்கள் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி பணத்தை இழப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை 37 மோசடி ஆன்லைன் லோன் ஆப்புகளை கூகுளுக்குப் பரிந்துரை செய்து முடக்கப்பட்டுள்ளன. எனவே, ஆர்பிஐ அனுமதி வழங்கிய லோன் ஆப்பை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

இதே போல மற்றொரு வழக்கான லோன் வாங்கி தருவதாகக் கூறி பத்து வருடங்களில் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துகிருஷ்ணா, சங்கர், இசக்கிவேல் ராஜன், சுதா ஆகிய நான்கு பேரை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 120 சவரன் தங்க நகை,15 அசையா சொத்துக்கள், முடக்கப்பட்டுள்ளன. அதேபோல செல்போன் உரையாடல் செயலியான சார்ட் கரோ ஆப் மூலம் பெண் போல் பழகி சாப்ட்வேர் கம்பெனியில் கேண்டீன் நடத்தும் காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறி 56 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் செல்போன் சிக்னலை வைத்து கோவாவில் பதுங்கி இருந்த சக்திவேல் மற்றும் அவரது காதலி பிரியாவை கைது செய்துள்ளனர். மேலும் கிப்ட் கூப்பன் ஸ்கேம் மோசடி தொடர்பாக சென்னையில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகப்படியான சைபர் புகார்கள் வருகின்றன. இந்த கும்பல் வெளிநாட்டு பணப்பரிவத்தனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவந்ததை அடுத்து அமலாக்கத்துறையினரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in