
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட 450 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ள சீர்காழி போலீஸார், அது தொடர்பாக ஆறு பேரை கைது செய்து செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி மதுபானம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து சீர்காழி மதுவிலக்கு போலீஸார் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தி இருந்தனர். ஆலங்காடு, நெய்தவாசல், சூரக்காடு உள்ளிட்ட பகுதியில் நேற்று வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திவந்த சந்தோஷ், பிரபாகரன், மணிகண்டன், சுதாகரன், நீதி ராஜன், கவியரசன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த போலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் 450 லிட்டர் பாண்டி சாராயத்தையும் பறிமுதல் செய்து ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு காரைக்காலில் இருந்து சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்ய முடியும். ஆனால் செய்வார்களா என்பது கேள்விக்குறியே.