இந்தியாவில் இதுவரை 437 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

ஒரே நாளில் 7,189 பேருக்குக் கரோனா
இந்தியாவில் இதுவரை 437 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், கரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று (டிச.25) மட்டும் 7,189 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது; 387 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

நாட்டில் இன்று வரை மொத்தம் 437 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 108 பேரும், டெல்லியில் 67 பேரும், குஜராத்தில் 43 பேரும், தெலங்கானாவில் 38 பேரும், கேரளத்தில் 37 பேரும் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

டெல்லியில் இன்று மட்டும் 249 பேர் புதிதாகக் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். இது நேற்றைய தினத்தை ஒப்பிட 38 சதவீதம் அதிகம். அதேபோல், கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இன்று கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், தலைநகரில் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,104 ஆக அதிகரித்திருக்கிறது. டிசம்பர் மாதத் தொடக்கம் முதல் இன்றுவரை டெல்லியில் 6 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு டெல்லி அரசு தடை விதித்திருக்கிறது. கலாச்சார நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவர்களில் 90 சதவீதம் பேர் முழுமையாகக் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்று தெரிவித்திருக்கும் சுகாதாரத் துறை, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தொற்றுக்குள்ளாக வாய்ப்பில்லை என நம்பியிருக்கக் கூடாது என்றும் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in