
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 40 அடி உயர வீணை சிலையைப் பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்.
1929 செப்டம்பர் 28-ல் பிறந்த லதா மங்கேஷ்கர், இந்தியாவின் மிகச் சிறந்த பாடகியாகப் புகழ்பெற்றவர். ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ எனப் புகழப்பட்ட அவர், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களை வசீகரித்தவர். அதிகமான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றதுடன், தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் காலமானார்.
இன்று அவரது 93-வது பிறந்ததினம். இதையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில், 40 அடி உயரமும் 14 டன் எடையும் கொண்ட பிரம்மாண்டமான வீணையைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்துவைக்கிறார். ‘லதா மங்கேஷ்கர் சவுக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவிடத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அரசியல் தலைவர்களும் ஆன்மிகச் சான்றோர்களும் கலந்துகொள்கிறார்கள்.
இதையொட்டி அயோத்தியில் உள்ள ராம் கதா பூங்காவில், ஒரு கலாச்சார நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுபடுத்தும் கண்காட்சியும் நடக்கவிருக்கிறது.