
ஜம்மு காஷ்மீரில் இன்று தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சித்ரா பைபாஸ் பகுதியில் உள்ள தாவி பாலம் அருகே, கடுமையான மூடுபனிக்கு இடையில் இன்று காலை பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. பயங்கரவாதிகள் டிரக்கில் காஷ்மீர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினர் பின்தொடர்ந்து சென்று சித்ரா சோதனைச் சாவடி அருகே வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது, உள்ளே இருந்து பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
காஷ்மீர் நோக்கிச் சென்ற அந்த டிரக்கில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சித்ரா சோதனைச் சாவடி அருகே அந்த லாரி நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் ஓட்டுநர் இயற்கையின் உபாதை கழிக்க செல்வதாக சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துவிட்டார்.
அதன்பிறகு நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் எங்கிருந்து ஊடுருவினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. லாரியை சோதனையிட்டவுடன் தெளிவான விவரங்கள் வெளிவரும் என்று போலீஸ் அதிகாரி கூறினார். தப்பி ஓடிய லாரி டிரைவரை பிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இருதரப்புக்கும் இடையே 45 நிமிடங்களுக்கும் மேலாக கடுமையான துப்பாக்கிச் சூடு நீடித்தது. அப்போது கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பயங்கர வெடி சத்தங்களும் கேட்டன. உமி ஏற்றப்பட்ட அந்த லாரியில் இருந்து புகையும் அதிகமாக வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.