தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; 4 போலீஸார் பணியிடை நீக்கம்: அதிரடியை தொடங்கியது தமிழக அரசு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; 4 போலீஸார் பணியிடை நீக்கம்: அதிரடியை தொடங்கியது தமிழக அரசு!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நான்கு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிக் கடந்த 22.05.2018 தேதியில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 3000 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சம்பர்பித்தார்.

அதில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன்னரே நிமிடத்திற்கு நிமிடம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் அதில் சில காவல்துறையினர் மீது ஆணையம் குற்றம்சாட்டியிருந்தது. அதன்படி, டி.ஐ.ஜி கபில்குமார்,  எஸ்.பி. மகேந்திரன், துணை எஸ்.பி. லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரெனென்ஸ் உள்ளிட்ட 17 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை (தற்போதைய நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர்), காவலர்கள் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in