4 பேர் வெடிகுண்டுடன் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருக்கிறார்கள்: ரயில்வே போலீஸை பதறவைத்த போன்கால்!

4 பேர் வெடிகுண்டுடன் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருக்கிறார்கள்: ரயில்வே போலீஸை பதறவைத்த போன்கால்!

பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடி குண்டுகளுடன் 4 நபர்கள் சுற்றித்திரிவதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தவறான தகவலைக் கொடுத்த ஓய்வுபெற்ற சுங்கத்துறை அதிகாரி மகனை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 4 நபர்கள் சுற்றித் திரிவதாக மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் கிடைத்த தகவல் பொய் என தெரியவந்ததை அடுத்து, அழைப்பு விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் அந்த நபருக்கே வீடியோ கால் செய்து பார்த்துள்ளனர். அப்போது மறுபுறம் இருந்து பேசிய நபர் அவ்வப்போது இதுபோன்ற செயல்களை செய்து வந்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (எ) பரத் குமார் (24) என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. உடனடியாக பிரவீன் வீட்டிற்குச் சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். கஞ்சா போதைக்கு அடிமையான பிரவீன் தன்னை யாரோ துரத்துவதுபோல் தானே கற்பனை செய்துகொண்டு தனது பெற்றோரிடம் தொடர்ந்து முறையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். நேற்றும் அதேபோல கஞ்சா போதையில் தனது தந்தையிடம் தன்னை 4 நபர்கள் கத்தியுடன் துரத்துவதாக கூறியதால், ஆத்திரமடைந்த அவனது தந்தை பிரவீனை திட்டி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து தந்தை திட்டிய ஆத்திரத்தில் பிரவீன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தவறான தகவலைக் கூறியது விசாரணையில் தெரியவந்தது. பிரவீனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது பெற்றோரை வரவழைத்து பிரவீனுக்கு உரிய மருத்துவ உதவி அளிக்க அறிவுறுத்த ரயில்வே போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியாக அழைப்பு விடுத்த பிரவீனின் தந்தை சுங்கத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in