காணாமல் போன 4 மீனவர்களைத் தேடிய ஹெலிகாப்டர்: எஞ்சின் பழுதால் என்ன நடந்தது? 

காணாமல் போன 4 மீனவர்களைத் தேடிய ஹெலிகாப்டர்: எஞ்சின் பழுதால் என்ன நடந்தது? 

படகுடன் மாயமான மண்டபம் மீனவர் 4 பேர், நெடுந்தீவு அருகே மீட்கப்பட்டு  இரவில் கரை திரும்பியதால் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். 

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து, தங்கச்சிமடம் ஆல்வின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் முருகானந்தம்,  கண்ணன்,  கோவிந்தசாமி,  ஜான் ஆகியோர் ஜன.4-ம் தேதி காலை பாக் ஜலசந்தி கடலில்  தொழிலுக்குச் சென்றனர். ஜன.5-ம் தேதி காலை கரை திரும்ப வேண்டிய அவர்கள் அன்று  மதியம் வரை  திரும்பவில்லை. 

இதையடுத்து மாயமான மீனவர்களை சக மீனவர்கள் மற்றொரு படகில் தேடிச்சென்றனர். அந்த மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், சக மீனவர்கள் கரை திரும்பினர்.  இதனால் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் கலக்கமடைந்தனர்.

மாயமான மீனவர்களை  2 நாட்டுப்படகுகளில் சக மீனவர்கள் நேற்று அதிகாலையில்  மீண்டும் தேடிச்  சென்றனர்.  மண்டபம் மீன் வளத்துறையினர்  வேண்டுகோளை ஏற்ற ராமேஸ்வரம் மரைன் போலீஸார், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை ரோந்து  கப்பல்கள், இந்திய கடற்படை   ஐஎன்எஸ் பருந்து உச்சிப்புளி விமானதள  ஹெலிகாப்டர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில், எஞ்சின் பழுதால், நெடுந்தீவு அருகே படகு கரை ஒதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. அப்படகை தேடிச்சென்ற படகுகள் கட்டி இழுத்து ராமேஸ்வரத்தில் நேற்றிரவு கரை சேர்த்தன. மாயமான மீனவர்கள்  இரண்டரை நாட்களுக்கு பின் இரவில் கரை திரும்பியதால் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in