சாலையோர குளத்தில் பாய்ந்த கார்; தாய், தந்தை, மகன், குழந்தை பலி; குலதெய்வத்தை தரிசித்துவிட்டு சென்றபோது சோகம்

சாலையோர குளத்தில் பாய்ந்த கார்; தாய், தந்தை, மகன், குழந்தை பலி; குலதெய்வத்தை தரிசித்துவிட்டு சென்றபோது சோகம்

திருவாரூர் அருகே எதிர்பாராத விதமாக குளத்தில் பாய்ந்த காரால்  அதிலிருந்து  ஒரு வயது குழந்தை உள்ளிட்ட நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கணேசன் ( 71).  அவரது மனைவி பானுமதி (67). இவர்களது மகன் சாமிநாதன்  (37). அவரது மனைவி  லட்சுமி  (35).  சாமிநாதன் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார்.  இந்த நிலையில் திருவாரூரில் உள்ள தங்களது குலதெய்வம் கோயிலுக்கு வந்து வழிபடுவதற்காக சாமிநாதன் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தையுடன்  நேற்று தங்களது  காரில் திருவாரூர் வந்துள்ளனர். சாமிநாதன் காரை ஓட்டி வந்திருக்கிறார்.

குலதெய்வம் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு நேற்று மாலை  திருவாரூரில் இருந்து சென்னை நோக்கி கிளம்பி உள்ளனர். மயிலாடுதுறை சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது  விசலூர் என்கிற இடத்தில்  சாமிநாதனின் கட்டுப்பாட்டை மீறி கார் சாலை ஓரம் இருந்த குளத்திற்குள் பாய்ந்தது.  

குளத்தில் இருந்த நீருக்குள் கார் முற்றிலுமாக மூழ்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடிப்போய் காருக்குள் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்குள் தகவல் அறிந்து வந்த திருவாரூர் தீயணைப்பு துறையினர் மற்றும்  நன்னிலம் காவல்துறையினர்  பொதுமக்களுடன் இணைந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் காரில் இருந்த  கணேசன், பானுமதி, சாமிநாதன்,  ஒரு வயது குழந்தையான லட்சுமிநாராயணன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் நால்வரும்  சடலமாக மீட்கப்பட்டனர். சாமிநாதனின் மனைவி  லட்சுமி மட்டும் உயிருடன் இருந்த நிலையில் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குலதெய்வம் கோயிலுக்கு வழிபட வந்த குடும்பம் குளத்தில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in