திருவிழாவில் சரிந்து விழுந்த கிரேன், பக்தர்கள் 3 பேர் பலி!

திருவிழாவில்  சரிந்து விழுந்த கிரேன்,  பக்தர்கள் 3 பேர் பலி!

அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவின்போது கிரேன் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த  நெமிலி  கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு  மயிலேறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ராட்சச கிரேன் வரவழைக்கப் பட்டு அதில் கொக்கி மாட்டி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் தொங்கியபடி  வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்து  விபத்துக்குள்ளானது.

இதில் கிரேனில்  தொங்கியவர்கள் கிழே விழுந்து பலமான காயம் அடைந்தனர். கிழே இருந்தவர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். 

காயம் அடைந்தவர்கள் புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவின்போது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகியுள்ள இந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும்  ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in