
வடமாநில தொழிலதிபரிடம் 100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி 4 கோடி ருபாய் முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷியாமல் சாட்டர்ஜி. இவர் நாக்பூரில் கேலக்ஸி சோலார் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Galaxy Solar Energy Pvt. Ltd) என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்ட நிலையில் தரகர்கள் மூலம் அறிமுகமான சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த ஈஸ்ட் கோஸ்ட் பிராபர்டீஸ் (East Coast Properties) என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். ஷியாமல் சட்டர்ஜிக்கு 100 கோடி லோன் தொகை 9.6% வட்டிக்கு, பாதுகாப்பு பத்திரம் இல்லாமல் தங்கள் நிறுவனத்தின் மூலம் லோன் கொடுப்பதாகவும் அதற்கு 6 மாத வட்டியாக முன்தொகை 4 கோடியை கொடுக்க வேண்டும் என்று கூறி நம்ப வைத்துள்ளனர். மோசடி கும்பல் கூறியதை நம்பி ஈஸ்ட் கோஸ்ட் பிராபர்டீஸ் நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்கு 3.50 கோடியை RTGS மூலமும், ரொக்கமாக 50 லட்சமும் ஆக மொத்தம் 4 கோடியை கொடுத்துள்ளார். ஆனால் ஷியாமல் சட்டர்ஜிக்கு எந்தவிதமான கடன் தொகையையும் கொடுக்காமல் வாங்கிய 4 கோடி ரூபாயுடன் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஷியாமல் கடன் வாங்கித் தருவதாக கூறி 4 கோடி ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தலைமறைவான மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். பின்னர் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுமதி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் முக்கிய குற்றவாளிகளான சென்னை புத்தகரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(43), கொண்டித்தோப்பை சேர்ந்த இம்தியாஷ் அகமது (எ) சத்தீஷ்குமார்(37) மற்றும் குன்றத்தூரை சேர்ந்த பவன்குமார் (எ) ரவி (எ) நியமத்துல்லா (45)ஆகியோரை கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மோசடி கும்பலிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாது. லிங்க்டு இன் (linked in) எனப்படும் இணையதளம் மூலம் தொழில் மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் கேட்கும் வடநாட்டு மற்றும் பிற மாநில தொழிலதிபர்களை மட்டும் குறி வைத்து இந்த கும்பல் மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. அதேபோல் நாக்பூரில் சோலார் நிறுவனம் நடத்தி வரும் ஷியாமல் சட்டர்ஜி 200 கோடி கடன் கேட்டு லிங்க்டு இன் இணையதளத்தில் தெரிவித்து இருந்தார். மோசடி கும்பல் லிங்க்டு இன் மூலமாக ஷியாமல் சட்டர்ஜியை அணுகி கடன் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி கடன் பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் ஈமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் ஷியாமல் சட்டர்ஜி கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும் அளவிற்கு நிறுவனத்திற்கு தகுதி உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்காக, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தை பார்க்கச் சென்றுள்ளனர். இது போன்று வருபவர்கள் 100 கோடி ரூபாய் அளவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் என்பதை நம்ப வைப்பதற்காக 20 லட்சம் ரூபாய்க்கு வாடகை எடுத்து பிரம்மாண்டமான சொகுசு அலுவலகம் மற்றும் விடுதிகளை வைத்திருந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பவுன்சர்களை பயன்படுத்தி நாடகமாடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் மோசடி கும்பலின் முக்கிய தலைவனை இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் போல் நடிக்க வைத்து முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் கடன் வழங்குவதாகவும், அதற்காக வட்டி தொகை 4 கோடி ரூபாய் முன்கூட்டியே செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்த வாடகைக்கு எடுத்த சொகுசு வீடு மற்றும் அலுவலகத்தின் பெயரிலேயே 11 வங்கிக் கணக்குகளை உருவாக்கி 4 கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு பத்திரம் இல்லாமல் 100 கோடி ரூபாய் தருவதால் பேராசையில் தொழிலதிபர் ஷியாமல் சாட்டர்ஜி பணத்தைக் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.
பணத்தை வாங்கிய பிறகு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்காததால் சந்தேகம் ஏற்பட்டு ஷியாமல், நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் நேரடியாக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு அலுவலகம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் காலி செய்துவிட்டு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரை பற்றி தெரிந்து கொள்ளாத வகையில் விர்ச்சுவல் நம்பரில் பேசி கொண்டு மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இவர்களை வைத்து இக்கும்பல் தலைவனை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டபோது, பேசும் வழக்கத்தை மாற்றி போலீஸார் வருவதை மறைமுகமாக காட்டி கொடுத்ததால் கும்பல் தலைவர் தப்பியது தெரியவந்ததை அடுத்து மோசடி கும்பல் தலைவனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிறுவனம் பயன்படுத்திய இ-மெயில் மற்றும் செல்போன் எண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இதுபோல் எத்தனை தொழிலதிபர்கள் ஏமாந்துள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடி கும்பலின் 11 வங்கிக் கணக்குகளை முடக்கி, 60 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுள்ளதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.