வங்கி மேலாளரின் கையொப்பத்தை போலியாக போட்டு 55 பவுன், 9 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் கைது

வங்கி மேலாளரின் கையொப்பத்தை போலியாக போட்டு  55 பவுன், 9 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில் வங்கி மேலாளர் போன்று போலி கையொப்பமிட்டு 55 பவுன் தங்க நகை, ரூ.9,78,786 பணத்தையும் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி குலசேகரபட்டினம் இந்தியன் வங்கி கிளையில் கடந்த 23.7.2018 முதல் 17.6.2020 வரையிலான காலக்கட்டத்தில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தவர் படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுடலை (எ) சுடலைராஜ் (48). இவர் வங்கியில் நகைக் கடன் பெற வரும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை அவர்கள் கேட்கும் கடன் தொகைகைய விட அதிகமான கடன் தொகைக்கு அடமானம் வைத்துள்ளார்.

அத்துடன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை, நகை உரிமையாளருக்குத் தெரியாமல் வங்கி அடமான அட்டையில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு நகைகளைத் திருப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள்.

அத்துடன் இவரது கூட்டாளிகளான படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த குமாரவேல் (41), ராம்குமார் (32), மற்றும் குலசேகரபட்டினம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோர்களின் பெயர்களில் அதிக தொகைக்கு அடமானம் வைத்துள்ளார். அத்துடன் இவர்களின் பெயர்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை வங்கியிலிருந்து திருப்பி வைத்துள்ளனர். இப்படி ரூ.9,78,786 பணத்தையும் 55 பவுன் தங்க நகைகளையும் இவர்கள் நான்கு பேரும் கையாடல் செய்துள்ளனர். இதுசம்பந்தமாக இந்த வங்கி கிளையின் மேலாளரான சங்கரசுப்பிரமணியன், கடந்த 9.9.2022 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடியில் ஈடுபட்ட சுடலை (எ) சுடலைராஜ், ரமேஷ், குமாரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in