
மலேசியா, துபாய் மற்றும் தோகா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’ மலேசியாவில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பயணிகளைச் சோதனை செய்ததில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் 24கேரட் சுத்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கத்தைக் கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.19.15 லட்சம் மதிப்பிலான 383 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தி வந்த நபரை கைது செய்தனர்.
தோகா நாட்டில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பயணிகளைச் சோதனைச் செய்ததில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.70.28 லட்சம் மதிப்பிலான 1370 கிராம் 24 கேரட் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர்’’ என கூறப்பட்டுள்ளது.