தமிழகத்தில் 16 மாதங்களில் 39 பேர் தற்கொலை: 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

தமிழகத்தில் 16 மாதங்களில் 39 பேர் தற்கொலை: 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 16 மாதங்களில் 39 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் விளையாட்டு நடைமுறைகள் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆன் லைன் சூதாட்டங்களான ரம்மி சர்கிள், ஜங்கிலி ரம்மி, டிரீம் லெவன், போன்றவற்றில் பலர் தங்கள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களுக்கான தடைச்சட்டம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான அருண்குமார் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மன உளைச்சலில் கடந்த 22-ம் தேதி வீட்டைவிட்டு மாயமானமார். கடந்த 26-ம் தேதி ஊர் கிணற்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த விரக்தியில் அருண் குமார் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 16 மாதங்களில் 39 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதன் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் விளையாடிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு உரிய விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குறிப்பாக ரம்மி சர்கிள், ஜங்கிலி ரம்மி, லூடோ, ரம்மி கல்சர், டிரீம் 11 உட்பட 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் விளையாட்டு நடைமுறைகள் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in