மகனை அழைக்க பள்ளிக்கு சென்ற தாய்... வருவதற்குள் தொட்டியில் மிதந்த பச்சிளம் குழந்தை: மதுரையில் அதிர்ச்சி

மகனை அழைக்க பள்ளிக்கு சென்ற தாய்... வருவதற்குள் தொட்டியில் மிதந்த பச்சிளம் குழந்தை: மதுரையில் அதிர்ச்சி

திருப்பரங்குன்றத்தில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் சடலமாக மிதந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சித்ராவிற்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், தனது மூத்த மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சித்ரா நேற்று மாலை பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருப்பதால் தனது மூன்றாவது கைக்குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியுற்று அவர் உடனடியாக அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.

அப்போது, மாலை 6 மணி அளவில் வீட்டின் மொட்டை மாடியில் தேடிக்கொண்டிருந்த போது, சித்ராவின் பக்கத்து வீட்டு மாடியில் இருந்த சின்டெக்ஸ் தொட்டியின் அருகே குழந்தையின் துண்டு கிடந்துள்ளது. உடனடியாக, தொட்டியின் உள்ளே பார்த்த போது குழந்தை தொட்டி தண்ணீரில் மிதந்தது தெரியவந்தது. உடனடியாக, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சின்டெக்ஸ் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in