கூகுள் நிறுவனத்துக்கு ஒரு மாதத்தில் இந்தியர்கள் அனுப்பிய 37,173 புகார்கள்: காரணம் என்ன?

கூகுள் நிறுவனத்துக்கு ஒரு மாதத்தில் இந்தியர்கள் அனுப்பிய 37,173 புகார்கள்: காரணம் என்ன?

இந்திய பயனாளர்களிடமிருந்து 37,173 புகார் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது சமூகவலைதளங்கள். சிறுவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். சின்ன சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தனி மனித தாக்குதல்களும் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களை நடத்தி வருகின்றனர். மதம் தொடர்பாக பதிவு செய்யப்படும் கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இப்படிப்பட்ட கருத்துகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்திய பயனாளர்களிடமிருந்து 37,173 புகார் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் பயனாளர்களிடமிருந்து கூகுள் 37,173 புகார்களை பெற்றது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.6 சதவீதம் அதிகம்.

இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 6,89,457 மோசமான பதிவுகளை வலைதளத்திலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. பயனாளர்களிடமிருந்து கூகுள் பெற்ற பெரும்பாலான புகார்கள் பதிப்புரிமை மீறல் தொடர்பானவை. பதிப்புரிமை சட்டவிதிகள் மீறப்பட்டது தொடர்பாக மட்டும் கூகுளுக்கு ஜூலையில் 35,351 புகார்கள் பயனாளர்களிடமிருந்து வந்துள்ளது. இதர புகார்கள் அனைத்தும், வர்த்தக முத்திரை, நீதிமன்ற உத்தரவு, கிராபிக் பாலியல் பதிவுகள் உள்ளிட்டவை தொடர்பானவை.

சிறார் பாலியல் துஷ்பிரயோக பதிவுகள், வன்முறை தீவிரவாத பதிவுகளை ஆன்லைன் வலைதளத்திலிருந்து தானாக கண்டறிந்து நீக்கும் வழிமுறைகளை கூகுள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-ன்படி, கூகுள் உள்ளிட்ட இதர சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது பயனாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in