35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்: சென்னை சென்ட்ரலில் அடிக்கடி சிக்குவது ஏன்?

35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்: சென்னை சென்ட்ரலில் அடிக்கடி சிக்குவது ஏன்?

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற 35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இரு நபரிடம் இருந்து ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் பிரிவு நுழைவு வாயிலில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பையுடன் பயணி ஒருவர் சுற்றி வந்தார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் சீனிவாசன்(45) என்பதும், எந்த விதமான ஆவணமும் இல்லாமல் 20 லட்சம் மதிப்புள்ள 403 கிராம் தங்கம் மற்றும் 28,000 மதிப்புள்ள 407 கிராம் வெள்ளி பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் சென்னையில் இருந்து காட்பாடி பகுதிக்கு எடுத்து செல்லவிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதேபோல் சுற்றி திரிந்த மற்றொருவரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஜீவா(40) என்பதும், 15 லட்சம் மதிப்புள்ள 305 கிராம் தங்கம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 212 கிராம் வெள்ளி பொருட்களை எந்தவித ஆவணமும் இல்லாமல் சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸார் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அண்மை காலமாகவே ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in